தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளை நிறைவேற்றாததால், அமெரிக்காவை சேர்ந்த, ‘டுவிட்டர்° சமூக வலைதளத்துக்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த, சட்ட பாதுகாப்பை நீக்கி, மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்திய அரசு கடந்த பிப்ரவரி 25-ந் தேதி புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை அறிவித்தது. அதன்படி, இந்தியாவில் அதிக பயனாளர்களுடன் செயல்படும் சமூக வலைத்தளங்கள், தங்கள் தளத்தில் வெளியிடப்படும் பதிவுகளுக்கு பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.
சர்ச்சைக்குரிய பதிவுகள் மீது ‘போலி’ என 36 மணி நேரத்தில் முத்திரை குத்த வேண்டும். அதற்கடுத்த 24 மணி நேரத்தில் அதை நீக்க வேண்டும்.மேலும், பயனாளர்களின் குறைகளுக்கு தீர்வு காண இந்தியாவில் வசிக்கும் ஒரு குறைதீர்ப்பு அதிகாரி, ஒரு தொடர்பு அதிகாரி, ஒரு தலைமை பொறுப்பு அதிகாரி ஆகியோரை நியமிக்க வேண்டும். இந்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள மே 25-ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. மே 26-ந் தேதி முதல் இவை அமலுக்கு வந்தன.
இந்த விதிமுறைகளை வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் ஏற்றுக்கொண்டு செயல்பட்டு வருகின்றன. ஆனால், ‘டுவிட்டர்’ நிறுவனம் ஏற்காமல் முரண்டு பிடித்தது. கடந்த 5-ந் தேதி டுவிட்டருக்கு மத்திய அரசு இறுதி எச்சரிக்கை விடுத்தது.அதற்கு டுவிட்டர் நிறுவனம் கூடுதல் கால அவகாசம் கேட்டது. அந்த கால அவகாசமும், கடந்த 14-ந் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால், புதிய விதிமுறைகளை டுவிட்டர் ஏற்றுக்கொள்ளவில்லை.
மேலும், புதிய விதிமுறைப்படி, டுவிட்டர் நியமித்த குறைதீர்ப்பு அதிகாரியும், தொடர்பு அதிகாரியும் இந்தியாவில் வசிப்பவர்கள் அல்ல. தலைமை பொறுப்பு அதிகாரி நியமனம் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.அத்துடன், புதிய விதிமுறைகளுக்கும் உடன்படாததால், டுவிட்டர் இதுவரை அனுபவித்து வந்த சட்ட பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. அதனால், இடைநிலை தளம் என்ற அந்தஸ்தையும் ‘டுவிட்டர்’ இழந்தது. இனிமேல், டுவிட்டரில் பயனாளர்கள் வெளியிடும் சர்ச்சைக்குரிய பதிவுகளுக்கு அவர்களுடன் டுவிட்டர் நிறுவனமும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
உத்தரபிரதேச மாநிலம் காசியபாத்தில் ஒரு முஸ்லிம் நபரின் தாடியை அகற்றி, அவரை ‘வந்தே மாதரம்’, ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறச்சொல்லி ஒரு கும்பல் தாக்குவதுபோல் டுவிட்டரில் ஒரு வீடியோ வெளியானது. அது போலியான வீடியோ என்று சொல்லி, அதை அகற்றுமாறு மத்திய அரசு உத்தரவிட்டது.
ஆனால், டுவிட்டர் அகற்றவில்லை. தற்போது, சட்ட பாதுகாப்பை இழந்ததால், ‘டுவிட்டர்’ நிறுவனம் மீது காசியாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலி வீடியோவை வெளியிட்டதாக இந்திய தண்டனை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய தகவல் தொழில்நுட்பம், சட்ட துறை அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத், அவர் கூறியுள்ளதாவது:டுவிட்டர் நிறுவனத்துக்கு பல வாய்ப்புகள் வழங்கப்பட்டு விட்டன. அவற்றை பயன்படுத்தி, சட்ட விதிகளுக்கு உட்பட்டு, நிபந்தனைகளை நிறைவேற்றி இருக்க வேண்டும். ஆனால், அந்த நிறுவனம் செயல்படுத்த மறுக்கும் முடிவை எடுத்துள்ளது.
இதில் முக்கியமானது, குறைதீர்வு அதிகாரியை நியமிக்க மறுப்பது தான். இந்திய மக்கள் தங்களுடைய குறைகளை தெரிவிக்க, இந்த நிறுவனம் வாய்ப்பு தரவில்லை.அமெரிக்கா உட்பட எந்த நாடாக இருந்தாலும், அங்கு செயல்படும் இந்திய நிறுவனங்கள், அங்குள்ள விதிகளை பின்பற்றுகின்றன. அதே நேரத்தில், இந்தியாவில் இயங்கும் ஒரு வெளிநாட்டு நிறுவனம், இந்திய விதிகளை ஏற்க மறுப்பதை ஏற்க முடியாது.
நம் நாட்டில், 1.75 கோடி பேர் டுவிட்டரை பயன்படுத்துகின்றனர். பயனாளிகளின் விருப்பத்தை நிறைவேற்றாமல், தன் சொந்த விருப்பத்துக்கு ஏற்ப, அந்த நிறுவனம் செயல்படுவதை ஏற்க முடியாது.அதுவும், தற்போது சமூக வலைதளங்களில் பொய் தகவல்கள் அதிகமாக பரப்பப்படும் நிலையில், அதை கட்டுப்படுத்த அரசுக்கு அந்த நிறுவனம் உதவ வேண்டும். இங்குள்ள சட்ட விதிகளை ஏற்க மறுக்கும் இந்த நிறுவனம், கருத்து சுதந்திரத்துக்காக போராடுவதாக காட்டிக் கொள்வது வேடிக்கை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Leave your comments here...