டி20 உலகக் கோப்பை திட்டமிட்டபடி நடைபெறும்: ஐசிசி தகவல்

Scroll Down To Discover

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டி திட்டமிட்டபடி அதே தேதிகளில் நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை டி20 உலகக் கோப்பை நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான தகுதிச்சுற்றில் விளையாடி ஆறு அணிகள் டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளன. இதன்மூலம் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன.

நேற்று, ஐசிசி உறுப்பினர்களுக்கான கூட்டம் டெலிகான்பரன்ஸ் முறையில் நடைபெற்றது. இதில் டி20 உலகக் கோப்பை குறித்து விவாதிக்கப்பட்டது. டி20 உலகக் கோப்பைப் போட்டி அக்டோபர் மாதம் தான் தொடங்குவதால் தற்போதைய நிலையில் போட்டியை ஒத்திவைப்பதற்கான முடிவு எதுவும் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை. அக்டோபருக்குள் கொரோனாவின் பாதிப்புகள் குறைந்துவிடும் என்பதால் திட்டமிட்டபடி அதே தேதிகளில் டி20 உலகக் கோப்பையை நடத்தவே ஐசிசி திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.