ஜம்மு காஷ்மீரில் தந்தை, சகோதரருடன் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை – பிரதமர் மோடி , பாஜக தலைவர்கள் கண்டனம்..!

Scroll Down To Discover

ஜம்மு காஷ்மீர் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஷேக் வசிம் மற்றும் அவரது தந்தை, சகோதரர் ஆகிய 3 பேரும் தனது வீட்டின் அருகே உள்ள கடையில் அமர்ந்தபடி நேற்று இரவு 9 மணியளவில் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த பயங்கரவாதிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் மூவர் மீதும் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு மூன்று பேரும் கொண்டு செல்லப்பட்டனர். எனினும், செல்லும் வழியில் ஷேக் வாசிம் உள்ளிட்ட 3 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக வாசிம் பாரிக்கு, தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக அளித்த புகாரின் பேரில் 7 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஆனால், யாரும் இல்லாத போது இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டதால், மெத்தனமாக செயல்பட்ட 7 பேரையும் கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஷேக் வசிம் குடும்பத்தினருடன் நேற்று இரவு தொலை பேசியில் பேசிய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.


இந்த தகவலை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.