செல்போன் பேசிக்கொண்டே கார் ஓட்டிய வழக்கில் டிடிஎப் வாசனை காவல்துறையினர் கைது செய்தனர்.செல்போன் பேசி கொண்டே டிடிஎப் வாசன் கார் ஓட்டிய வீடியோ வைரலாக நிலையில் காவல்துறை நடவடிக்கையை எடுத்துள்ளது.
இவர் மீது ஏற்கனவே வேகமாக வாகனம் ஓட்டுதல், விபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல், போக்குவரத்து விதிகளை மீறியது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது பிறருக்கு மரணம் ஏற்படுத்தும் வகையில் ஒரு காரியத்தை செய்தல் என மற்றொரு பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற வளாகத்திற்கு டிடிஎப் வாசன் போலீஸ் பாதுகாப்போடு அழைத்து வரப்பட்டார். அப்போது, “வீதிக்கு ஒரு டாஸ்மாக் கடை இருக்கிறது, அதனால் யாரும் கெட்டுப் போகவில்லையா? என்னை பார்த்து தான் இளைஞர்கள் கெட்டுப் போகிறார்களா? என் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனக்கு நீதி வேண்டும்” என்று டிடிஎப் வாசன் கூச்சலிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கின் விசாரணையில் டிடிஎப் வாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “டிடிஎப் வாசனால் எந்தவொரு தனிமனிதனும் பாதிக்கவில்லை, புகாரும் அளிக்கவில்லை எனவும் சென்னையில் இருந்து சென்ற போது எந்த காவலரும் விதிமீறல் குறித்து பார்க்கவில்லையா? காவலர் கொடுத்த புகாரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாசனுக்கு முதுகுவலி உள்ளது, கண்ணாடி அணிந்து தான் வெளியே செல்ல முடியும். வரும் 4ஆம் தேதி சினிமா பட சூட்டிங் உள்ளது, எனவே நிபந்தனை ஜாமின் வழங்க வேண்டும்” என்று தனது வாதத்தை முன்வைத்தார்.
கார் ஓட்டுநர் உரிமம் பெற LLR மட்டுமே வைத்துள்ள டிடிஎப் வாசன், தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தை இயக்கியுள்ளார் என்று அரசுத்தரப்பு வாதம் முன்வைத்தது.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, டிடிஎப் வாசனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், இனி இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டேன் என மன்னிப்பு கோரி டிடிஎப் வாசன் வீடியோ வெளியிட வேண்டும் எனவும் அதனை கடிதம் வாயிலாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
Leave your comments here...