செல்போனுக்காக 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வீணடித்த அரசு அதிகாரி..!

Scroll Down To Discover

சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் உள்ள கொய்லிபேடா பகுதி உணவுத்துறை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜேஷ் விஸ்வாஸ். இவர் கடந்த மே 23 ஆம் தேதி கேர்கட்டா எனும் நீர்தேக்க பகுதியை சுற்றிப் பார்க்கச் சென்றுள்ளார். நீர்தேக்கத்தின் அருகில் நின்று ராஜேஷ் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக கைதவறி ராஜேஷின் செல்ஃபோன் நீர்தேக்கத்திற்குள் விழுந்தது. சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட்போன் நீர்தேக்கத்திற்குள் விழுந்ததால் பதறிய ராஜேஷ், அங்கிருந்தவர்களை அழைத்து தன்னுடைய செல்ஃபேனை மீட்கும்படி கூறியுள்ளார். அவர்களும் முயற்சி செய்தனர். ஆனால், 15 அடி ஆழமுள்ள நீர்தேக்கத்தில் செல்ஃபோன் விழுந்திருந்ததால் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து ராஜேஷ் விஸ்வாஸ், இரண்டு கனரக மோட்டார்களை பயன்படுத்தி நீர்தேக்கத்திலிருந்து தண்ணீரை வெளியேற்றியுள்ளார். செல்ஃபோனை மீட்பதற்காக தொடர்ந்து மூன்று நாட்கள் மோட்டார்கள் மூலம் 21 லட்சம் லிட்டர் தண்ணீரை ராஜேஷ் வெளியேற்றியுள்ளார்

இதுகுறித்து நீர் மேலாண்மை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து ராஜேஷை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதையடுத்து ராஜேஷை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து கான்கேர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா சுக்லா உத்தரவிட்டார். அரசு அதிகாரியான ராஜேஷ் விஸ்வாஸ் செய்த இந்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.