சென்னை மக்கள் இனி பால் வாங்க வெளியே செல்ல வேண்டாம் – வீடு தேடி வரும் ஆவின் பால்..!

Scroll Down To Discover

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 72 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1755 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 2 பேர் உயிரிழந்ததால் மொத்தம் பலியானவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.தற்போது வீட்டுக்கண்காணிப்பில் 25,503 பேரும், அரசு கண்காணிப்பில் 19 பேரும் உள்ளனர். 28 நாட்கள் தனிமைப்படுத்தல் காலம் முடித்தவர்கள் எண்ணிக்கை 87,159 ஆக உள்ளது. ஒரே நாளில் 114 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 866 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 864 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் கொரோனா நோய் தொற்றின் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில், தொடர்ந்து பால் வழங்கும் பொருட்டு, தனிமைப்பட்ட பகுதிகளில் பால் மற்றும் பால் உபபொருட்கள் தங்குதடையின்றி கிடைத்திட, பொதுமக்களுக்கு தேவைப்படும் இடங்களில் ஆவின் நிறுவனத்தின் மூலம் தற்காலிகமாக ஆவின் கடைகள் அமைத்தும், நடமாடும் பாலகங்கள் ஏற்படுத்தியும் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவையான மளிகை பொருட்கள் கொள்முதல் செய்யும் மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் ஆகிய இடங்களில் ஆவின் பால் உபபொருட்கள் கிடைக்க ஏதுவாக, ஆவின் முகவர் நியமன விதிகளில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. முகவர் நியமனத்திற்கான வைப்புத்தொகை ரூ.1000-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி வணிக நிறுவனங்கள் தங்களின் விற்பனையை அதிகரித்துக்கொள்ளலாம்.

இந்த நடவடிக்கைகளின் மூலமாக சென்னை மற்றும் தமிழகம் எங்கும் தினசரி ஆவின் பால் விற்பனை 22.50 லட்சம் லிட்டரில் இருந்து 24.50 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது.தற்போது அதிநவீன பாலகங்களின் மூலம் நுகர்வோரின் வீடுகளைத் தேடிச் சென்று பால் மற்றும் பால் உபபொருட்கள் வினியோகம் செய்வதற்காக சூமோட்டோ மற்றும் டன்சோ நிறுவனங்களுடன் ஆவின் நிறுவனமும் இணைந்து சேவையாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் நேற்று முதல் சூமோட்டோ மற்றும் டன்சோ நிறுவனங்கள் மூலமாக ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் நுகர்வோர் வீடுகளுக்கு நேரடியாக வினியோகம் செய்யப்படுகின்றன.மேலும், தற்போது ஊரடங்கு நிலவிவரும் நிலையில் சென்னை மாநகர பொதுமக்களுக்கு தங்குதடையின்றி, எவ்வித சிரமமும் இன்றி, நுகர்வோரின் வீடுகளைத் தேடி சென்று, பால் மற்றும் பால் உபபொருட்கள் கிடைக்க, ஆவின் நிறுவனத்தால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் இது குறித்து தமிழக முதல்வர் ட்விட்டர் பக்கத்தில்:- பால் மற்றும் பால் பொருட்களை வீடு தேடிச் சென்று விநியோகம் செய்ய ஆவின் நிறுவனம், Zomato மற்றும் DUNZO நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டுள்ளது.24.4.2020 முதல் ஆவின் பால் மற்றும் பால்பொருட்கள் நுகர்வோர்களின் வீடுகளுக்கு நேரடியாக விநியோகம் செய்யப்படுகின்றன.