சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழித் தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்..!

Scroll Down To Discover

தாணு, மால், ஐயன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒருங்கே தாணுமாலயனாகக் காட்சிதரும் புனிதத் தலம், சுசீந்திரம். இங்குதான் தேவர்களின் தலைவன் இந்திரன் சாப விமோசனம் பெற்றார். கன்னியாகுமரி மாவட்ட கோயில்களில், அதிக நாள்கள் திருவிழா நடக்கும் இந்தக் கோவிலில், மார்கழி மாதம் 10 நாள்கள் நடக்கும் திருவிழாவில், பெரிய சுவாமி தேர் உள்ளிட்ட 4 தேர்கள் ஓடும். அடுத்ததாக, சித்திரை மாதம் நடக்கும் 10 நாள் திருவிழாவில், சுவாமி தேர் தவிர மீதமுள்ள 3 தேர்கள் ஓடும். ஆவணி மாதம் மற்றும் மாசி மாத திருவிழாக்களின்போது, ஒரு தேர் ஓடும். மாசி மாதத் திருவிழா 9 நாள்கள் மட்டுமே நடத்தப்படும்.

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 1 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த் திருவிழா இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரத மாட வீதிகளிலும் வலம் வந்து பகல் 11.30  மணிக்குக் கோவில் நிலைக்கு வந்தடைந்தது. திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட நகரங்களிலிருந்து சுசீந்திரத்துக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்த தேரோட்ட திருவிழா நிகழ்வில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார், பக்தர்கள் என உடன் கலந்து கொண்ட திருதேரை வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்