சீன ஆப்களுக்கு தடை விதித்தது டிஜிட்டல் தாக்குதல் – மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்..!

Scroll Down To Discover

இந்தியாவின் லடாக்கின் கல்வான் பகுதியில் ஐந்து வாரங்களாக இந்திய – சீன படைகள் முகாமிட்டிருந்த நிலையில்,( ஜூன்15) மாலையில், திடீரென மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் நடத்திய அட்டூழிய தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். எல்லையில் உள்ள நிலையை மாற்றியமைக்க முயன்ற நம் ராணுவத்திற்கு பதிலடி கொடுத்தனர். இதில் 43 சீன வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த வீரர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.

இதையடுத்து, நாடு முழுவதும், சீன பொருட்களை (Boycott China) புறக்கணியுங்கள் என அறைகூவல் விடுக்கப்படுகிறது. மக்கள் மத்தியில் சீனாவுக்கு எதிரான கோபம் பல இடங்களில் வெளிப்படுத்தப்பட்டது.சீன உபகரணங்களை பயன்படுத்தப்போவதில்லை என இந்திய ரயில்வே துறையும், பிஎஸ்என்எல் நிறுவனமும் முடிவு செய்துள்ளன. மேலும், உ.பி மாநிலத்தில் ரயில்வே பணிகளுக்காக சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.மஹாராஷ்டிரா அரசு, சீன நிறுவனங்களுடன் ரூ.5 ஆயிரம் கோடியில் செய்திருந்த பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்துள்ளது. பீகாரில் பாலம் கட்ட இரு சீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த ரூ.2,900 கோடி ஒப்பந்தத்தை அம்மாநில அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.

மேலும் இந்தியாவில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் டிக்டாக், ஹலோ, ஷேர் இட் உள்பட சீனாவுடன் தொடர்புடைய 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது

இதைபோல் சாலை கட்டுமான பணிகளில் கூட்டு திட்டங்களில், சீனா நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது. இதற்காக மத்திய அரசு உறுதியான முடிவை எடுத்துள்ளது. நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்களை தடை செய்யவும், இந்திய நிறுவனங்களுக்கு விதிகளை தளர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட சில திட்டங்களில் சீன நிறுவனங்கள் இருந்தாலும், இனி வரும் காலங்களில் , சீன நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும். கட்டுமான விதிகள் சரியில்லாமல் உள்ளது. அதனை மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.அதனை மாற்றுவதன் மூலம், இந்திய நிறுவனங்கள் பயன்பெறும். தொழில்நுட்பம், ஆலோசனை மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றில் கூட்டு திட்டமாக இருந்தாலும், சீன நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம் என என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.


இந்த நிலையில் நாட்டு மக்களின் தரவுகளை காப்பாற்றவே சீன நிறுவனங்களின் செல்போன் செயலிளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் கூறியுள்ளார். மத்திய அரசின் நடவடிக்கை தொழில்நுட்ப ரீதியான தாக்குதல் என்பதையும் ரவி ஷங்கர் பிரசாத் குறிப்பிட்டார்.