சிவனடியார் சாவுக்கு காரணமான எஸ்.ஐ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – முதல்வருக்கு கோரிக்கை வைத்த அர்ஜூன் சம்பத்.!

Scroll Down To Discover

சேலம் சிவனடியார் சரவணன் சுவாமிகள் சாவுக்கு காரணமான போலீஸ் எஸ்.ஐ அந்தோனி மைக்கேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியீட்டுள்ள அறிக்கையில்:- சேலம் மாவட்டம் தேவூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட புளியம்பட்டி பகுதியை சேர்ந்த இந்து சாமியார் சிவனடியார் தவத்திரு.சரவணன் சுவாமிகள் அவர்கள் அப்பகுதியில் சிவபுஜைகள் செய்தும், அருள்வாக்கு சொல்லியும், மக்களுக்கு ஆன்மிக வழியில் இறைபணி செய்து வந்துள்ளார் என்பது இப்பகுதிமக்கள் அனைவரும் சொல்லுகின்ற தகவல்.

சிவனடியார் சரவணன் தேவூர் காவல்நிலைய துணை ஆய்வாளர் திரு.அந்தோனிமைக்கல்ராஜ் தன்னை தகாத வார்த்தைகளில் பேசி அடித்து துன்புறுத்தியதாகவும், இதனால் தனக்கு உடல் வலி மற்றும் அவமானம் ஏற்பட்டு மன உளைச்சல் உண்டானது. எனவே எனது சாவுக்கு முழுகாரணம் அந்தோனி தான் என்றும் தனது தற்கொலைக்கு முன்பாக சிவனடியார் வாக்குமூலம் கொடுத்து பேசி வீடியோ ஒன்றை பதிவிட்டு அது சமூக ஊடகங்களில் வேகமாக பரவு வருகிறது.

இது சம்பந்தமாக சிவனடியார் குடும்பத்தாரும் அவரது உடலில் காயங்கள் இருந்தது என்றும் மரணத்திற்கு காரணம் அந்தோனியின் துன்புறுத்தலே என்றும் கூறுகின்றனர். எனவே சிவனடியார் சரவணன் மரணத்திற்கு முன்பு கொடுத்த வாக்கு மூலத்தின் படி அந்தோனிமைக்கல்ராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். இவ்வழக்கினை நீதி மன்றத்தின் கண்காணிப்பில் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.
சிவனடியார் சரவணன் குடும்பத்தாருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு மற்றும் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும். சாத்தான்குளம் காவல் நிலையம் பெலிக்ஸ் கொலை வழக்கில் நடவடிக்கை எடுத்தது போல இதிலும் சட்டப்பூர்வமாக விரைவான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

அனைத்து அரசியல் கட்சிகள், ஊடகங்கள் இது குறித்து குரல் கொடுத்து சிவனடியாரின் மரணத்திற்கு நீதி கோரி தமிழக அரசிடம் முறையிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இந்நிலையில் சாமியார் சரவணனுக்கு ஆதரவாக ட்விட்டரில் பலரும் நீதி கேட்டு வருகின்றனர். சரவணன் கடைசியாக பேசிய அந்த வீடியோவை பாஜகவின் தேசிய செயலாளர், ஹெச்.ராஜா , காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் ட்விட்டரில் பதிவிட்டு நீதி கேட்டு வருகின்றனர்.


மேலும் #justiceforSaravanan என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் டிவிட்டர் பக்கத்தையும் அதில் டேக் செய்தும் கருத்து பதிவிட்டும் வருகின்றனர்.