சிதலமடைந்த சிவன் கோவில் : கலசத்திற்கு மீண்டும் சக்தியூட்டிய ஈஷா யோகா மையம்..!

Scroll Down To Discover

பல ஆண்டுகளுக்கு பிறகு புனரமைக்கப்பட்ட சிவன் கோவிலின் கோபுர கலசத்திற்கு சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட எந்திரத்தை கொண்டு ஈஷா பிரம்மச்சாரிகள் சக்தியூட்டினர்.

சென்னையில் இருந்து 70 கி.மீ தொலைவில் இருக்கும் திருக்கழுக்குன்றம் அருகே அமைந்துள்ளது குடிபேரம்பாக்கம் என்னும் கிராமம். அங்கு இருக்கும் குமரேஸ்வரர் கோவில் முருக பெருமானால் வழிப்பட்ட தலமாகவும், மிகவும் பழமையான சிவ தலமாகவும் அறியப்படுகிறது.

இக்கோவில் பல ஆண்டுகளாக பூஜைகளும் வழிபாடுகளும் சரியாக நடக்காமல் சிதலமடைந்து கிடந்தது. இதனை பார்த்து மனம் வருந்திய அவ்வூர் பக்தர்கள் சில தன்னார்வ அமைப்புகளின் உதவியுடன் அக்கோவிலை படிப்படியாக புனரமைத்து தற்போது புதுப் பொலிவுடன் மாற்றி இருக்கின்றனர்.

அத்துடன், கோவிலுக்கு சிறப்பான முறையில் கும்பாபிஷேகமும் நடத்தி மகிழ்ந்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக, கோபுர கலசத்திற்கு சக்தியூட்டுவதற்காக அவர்கள் ஈஷா பிரம்மாச்சாரிகளுக்கு அழைப்பு விடுத்தனர். அதை ஏற்ற ஈஷாவின் பிரம்மாச்சாரிகள் கோவையில் இருந்து அங்கு சென்று சிறப்பு பூஜை ஒன்றையும் நடத்தினர். அப்போது சத்குரு அவர்கள் பிரதிஷ்டை செய்த எந்திரத்தை கோபுர கலசத்திற்குள் வைத்து குரு பூஜை செய்தனர். மேலும், ‘யோக யோக யோகேஸ்வராய’ என்ற மந்திர உச்சாடனையையும் அவர்கள் மேற்கொண்டனர்.

பின்னர், ஆகம முறைப்படி அக்கலசம் நிர்மாணிக்கப்பட்டு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட சிவ பக்தர்கள், கிராம மக்கள் மற்றும் ஈஷா தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.