சிகிச்சை கட்டணம் செலுத்தத் தவறியதற்காக 80 வயது முதியவர் கட்டிப்போட்ட மருத்துவமனை..!

Scroll Down To Discover

மத்தியப் பிரதேச மாநிலம் சஜாபூரில் 80 வயது முதியவர் ஒருவர் வயிற்றுவலி காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் சிகிச்சை கட்டணமாக மொத்தம் ரூ.11,000 வந்த நிலையில், முதியவரின் குடும்பத்தினரால் ரூ.5000 மட்டுமே செலுத்த முடிந்துள்ளது. மீதி தொகையை செலுத்தினால் மட்டுமே முதியவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனக்கூறி மருத்துவமனை நிர்வாகத்தினர் அவரை படுக்கையிலேயே கட்டிவைத்திருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், முதியவருக்கு வலிப்பு ஏற்பட வாய்புள்ளதால் கட்டிவைக்கப்பட்டதாக விளக்கமளித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் அவரின் சிகிச்சை கட்டணத்தை தள்ளுபடி செய்துவிட்டதாகவும் கூறியுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் முதியவருக்கு நடந்த அநீதி குறித்து தனது கவனத்திற்கு வந்ததாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.