சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் தற்போது வசதியான பஸ் நிலையம் இல்லை. இங்குள்ள தலசயன பெருமாள் கோவில் முன்புறம், குறுகிய திறந்த வெளி பகுதியே பஸ் நிலையமாக உள்ளது. சென்னை மாநகர், அரசு, தனியார் பஸ்கள் நிறுத்த இடம் இல்லாமல் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன.
இதனால் மாமல்லபுரத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே மாமலல்லபுரம் புறநகர் பகுதியில் சுற்றுலா பயணிகள் வந்து செல்ல வசதியாக அதிநவீன பஸ் நிலையம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பினராலும் விடப்பட்டது.
இதை ஏற்று திருக்கழுக்குன்றம் சாலை பகுதி, பக்கிங்காம் கால்வாய் அருகில், 6.80 ஏக்கர் இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. பஸ் நிலைய கட்டுமானத்துக்காக ரூ.18 கோடியில், தனியாரிடம், 2019-ல் பணி ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. 2020-ல் மண்ணை பரிசோதித்தும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இதையடுத்து, இத்திட்டத்தை செயல்படுத்துவதாக சென்னை பெருநகர திட்ட நிர்வாகம் கடந்த ஆண்டு அறிவித்தது. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலர் உள்ளிட்டோருடன் ஆய்வு செய்து, ஓராண்டு கடந்தும் கிடப்பில் உள்ளது.
இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சட்டசபை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும மானிய கோரிக்கையில், திருப்போரூர் விடுதலை சிறுத்தை எம். எல்.ஏ. பாலாஜி இத்திட்டம் குறித்து தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதில் அளித்த, அமைச்சர் சேகர்பாபு, “மாமல்லபுரம் பஸ் நிலையம், ரூ.50 கோடியில் அமைக்கப்படும்” என அறிவித்துள்ளார்.
Leave your comments here...