சமூக இடைவெளியை கடைபிடிக்க தவறினால் ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும் : அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்!

Scroll Down To Discover

தமிழகத்தில் மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்க, முகக்கவசம் அணிவதுடன், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. தொழிற்சாலைகள், மக்கள் கூடும் இடங்கள், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள், போக்குவரத்து உள்ளிட்ட இடங்களில் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

பொது இடங்களில் விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில், பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதுகுறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் கீழ் தமிழக கவர்னர் சில விதிகளை உருவாக்கி உள்ளார். அதன்படி, ஊரடங்கு உத்தரவு, சமூக இடைவெளிக்கான நடவடிக்கை போன்றவற்றுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளை இசைந்து தீர்க்கக்கூடிய (காம்பவுண்டபிள்) குற்றமாக கருதப்படுகிறது. அதற்கான தண்டனைகளும் இந்த உத்தரவு மூலம் அறிவிக்கப்படுகிறது.

இந்த விதிகளின்படி, நேரத்துக்கு நேரம் அதிகாரி பிறப்பிக்கும் உத்தரவுகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி தனிமைப்படுத்துவது தொடர்பான உத்தரவுகளை மீறுவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.மேலும் வாயையும், மூக்கையும் சேர்த்து மூடி முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம், பொது இடங்களில் எச்சில் துப்புவோருக்கு ரூ.500 அபராதமும், பொது இடங்கள் மற்றும் கூடுகைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத தனிநபருக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்படும்.

சலூன், ஸ்பா, உடற்பயிற்சி கூடம், வணிக வளாகங்கள், பொது இடங்களில் நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாத தனிநபருக்கு ரூ.500 அபராதமும் மற்றும் அவற்றை பின்பற்றாத வாகனம் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.