சத்ரபதி சிவாஜியுடன், பிரதமர்மோடியை ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ள புத்தகம்: பாஜகவிற்கு சிவசேனா கடும் எதிர்ப்பு..!

Scroll Down To Discover

பாஜகவைச் சேர்ந்த ஜெய் பகவான் கோயல் சமீபத்தில், ‘ஆஜ் கே சிவாஜி: நரேந்திர மோடி’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். இப்புத்தகத்திற்கு எதிர்ப்புகள் அதிக அளவில் குவிந்து வருகின்றன. சிவசேனாவின் மூத்த தலைவரும் எம்.பியுமான சஞ்சய் ராவுத் இந்தப் புத்தகம் குறித்து கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவில்:-, ‘மகாராஷ்டிரா பா.ஜ.க இந்தப் புத்தகம் குறித்து அவர்களது நிலைப்பாட்டை விளக்க வேண்டும். சத்திரபதி சிவாஜியை இந்த உலகத்தில் யாருடனும் ஒப்பிட முடியாது. ஒரே ஒரு சூரியன், ஒரு சந்திரன். அதுபோல ஒரு பேரரசர் சிவாஜிதான், சத்திரபதி சிவாஜி. பிரதமரை திருப்திப்படுத்த சில விசுவாசமான அடிமைகள் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது. மோடியை சந்தோஷப்படுத்த வேண்டும் என, நாவால், ‘ஷூ’வை துடைப்பவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்.

அவர்கள்தான் அவருக்கு பிரச்சினையை உருவாக்குகிறார்கள்.பாஜக அவர்களை அகற்ற வேண்டும். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தப் புத்தகத்தை உடனடியாக தடை செய்யவேண்டும். இந்தப் புத்தகம் டெல்லி பா.ஜ.க அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் யாரிடமாவது இருந்தது தெரிந்தால் அவர்கள் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’ என்று குறிப்பிட்டுள்ளார். பாஜகவில் உள்ள சிவாஜியின் குடும்பத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., சம்பாஜி ராஜே மற்றும் முன்னாள் எம்.பி.யான உதயன்ராஜே போன்சலே, இது குறித்து தங்களுடைய கருத்தை தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இது குறித்து சிவாஜி குடும்பத்தைச் சேர்ந்த, பா.ஜ., – எம்.எல்.ஏ.,வான சிவேந்திரராஜே போன்சலே கூறுகையில் :- தனிப்பட்ட பலனை பெறுவதற்காக, சிலர் இந்த புத்தகத்தை எழுதியுள்ளனர். சிவாஜியுடன், மோடியை ஒப்பிடுவதை ஏற்க முடியாது. ”இதுபோன்றவர்களை கட்சி கட்டுப்படுத்த வேண்டும். மேலும் பாஜக எம்.எல்.ஏக்களை இந்தப் புத்தகத்துக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்தப் பிரச்னை குறித்து, பாஜக ஊடகப்பிரிவு துணைத் தலைவர் சஞ்சய் மயுக் கூறியதாவது:- இந்த புத்தககத்துக்கும், கட்சிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அது புத்தகத்தை எழுதியவரின் தனிப்பட்ட கருத்து. இது தொடர்பாக, இதை எழுதிய ஜெய் பகவான் கோயலுடன் பேசினேன். சம்பந்தப்பட்ட பகுதியை நீக்குவதற்கு தயாராக உள்ளதாக அவர் கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.