சத்தீஷ்கர்: மாவோயிஸ்டுகளுடன் என்கவுன்டரில் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் வீரமரணம்.!

Scroll Down To Discover

சத்தீஷ்கரில் மாவோயிஸ்டு எதிராக நடந்த என்கவுன்டரில் , பாதுகாப்புபடை வீரர்கள் 5 பேர் வீரமரணம் அடைந்தனர்.

சத்தீஷ்கர் மாநிலம் பிஜப்பூர், நாராயண்பூர் ஆகிய மாவட்டங்கள் நக்சல்கள் ஆதிக்கம் மிகுந்த வனப்பகுதியாகும். இங்கு நக்சல்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து பாதுகாப்புபடையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது இரு தரப்பிலும் நடந்த என்கவுன்டரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்புபடை தரப்பில் 5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 14 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று என்கவுன்டரில் உயிரிழந்த 5 வீரர்களில் 2 -பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சத்தீஷ்கர் காவல்துறை வட்டாரங்கள் கூறியதாக ஏ.என்.ஐ இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.


இதற்கிடையே, வீரர்களின் உயிர்த்தியாகத்திற்கு தலை வணங்குவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். அமித்ஷா கூறியிருப்பதாவது: சத்தீஷ்கரில் மாவோயிஸ்டுகளுடனான துப்பாக்கிச்சண்டையில் வீர மரணம் அடைந்த நமது துணிச்சலான வீரர்களுக்கு தலை வணங்குகிறேன்.

வீரர்களின் தியாகத்தை தேசம் ஒருநாளும் மறக்காது. உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அமைதி மற்றும் வளர்ச்சிக்கு எதிரியாக உள்ள இவர்களுக்கு எதிராக நாம் தொடர்ந்து போராடுவோம்” என்றார்.