சதுரகிரி மலையில் ஒரே நாளில் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் – நவராத்திரி துவங்கும் இன்றும் ஏராளமான பக்தர்கள் வருகை.!

Scroll Down To Discover

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு, நேற்று புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மலை மேல் உள்ள சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் சுவாமிகளை தரிசனம் செய்தனர்.

நேற்று ஒரே நாளில் மட்டும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இது கடந்த மாத மகாளய அமாவாசையை விட கூடுதலாகும். மகாளய அமாவாசைக்கு 11 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் கூறியிருந்தது. மேலும் இன்றும் பக்தர்கள் சதுரகிரிமலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

இன்று நவராத்திரி விழா துவங்குவதால், காலையிலிருந்தே சதுரகிரி மலைக்கு பக்தர்கள் அதிகளவில் வந்து கொண்டு இருக்கின்றனர். இன்று மதியம் வரை மலைக் கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். மகாலிங்கமலையில் காட்சி தரும் சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசிக்க தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர்.