கோவில் சொத்துக்கள் விவகாரம்: அறநிலையத்துறை நடவடிக்கைக்கு நல்லாட்சிக்கான முதல்படி தமிழக அரசுக்கு சத்குரு பாராட்டு.!

Scroll Down To Discover

கோவில்களின் சொத்துக்கள் குறித்த ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்ற இந்து அறநிலையத் துறையின் முடிவிற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அறநிலையத்துறைக்கும் தமிழக அரசுக்கும் பாராட்டுகள் – சரியான திசையில் எடுக்கப்பட்டுள்ள வரலாற்று நடவடிக்கை இது. மக்களின் வேண்டுகோளை ஏற்று துரித நடவடிக்கை எடுத்தமைக்கு பாராட்டுகள். வெளிப்படைத் தன்மைதான் நல்லாட்சிக்கான முதல்படி. நல்வாழ்த்துகள்.” என்று கூறியுள்ளார்.

அந்த ட்வீட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோரை டேக் செய்துள்ளார்.
சத்குரு அவர்கள் ‘கோவில் அடிமை நிறுத்து’ என்ற இயக்கத்தின் மூலம் அறநிலையத் துறையின் வரவு, செலவு கணக்குகளை வெளி தணிக்கை செய்ய வேண்டும், ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களை மீட்க வேண்டும், கோவில்களுக்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் நிலங்களுக்கு தற்போதைய சந்தை நிலவரத்திற்கு ஏற்ப வாடகை நிர்ணயித்து, அதை வசூலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.