கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய விமானங்களை தரை இறக்க தடை விதிப்பு..!

Scroll Down To Discover

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம் 6 விமானிகள் உள்பட 190 பேருடன் கடந்த 7-ந் தேதி இரவு தரையிறங்கியபோது விபத்துக்குள்ளாகி 2 துண்டாக உடைந்தது. இந்த விபத்தில் விமானிகள் உள்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த பயணிகள் கோழிக்கோடு பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இதுகுறித்து மத்திய விமானப்போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங், ‘விமான விபத்தில் காயம் அடைந்த 149 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 23 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதில் 3 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 74 பயணிகள் உடல்நலம் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பருவமழை காலங்களில் கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் தரை இறங்க தடை விதித்து, சிவில் விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. விமான விபத்தை தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.