கொரோனா பாதிப்பு : கடந்த ஒரு வாரத்தில் 13% பாதிப்பை குறைத்துள்ள இந்தியா உலக சுகாதார அமைப்பு தகவல்

Scroll Down To Discover

இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் புதிதாக தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 13 சதவீதம் குறைந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்த அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- உலக அளவில் கடந்த ஒரு வாரத்தில் 48 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 86 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் பாதிப்பு 12 சதவீதமும், உயிரிழப்பில் 5 சதவீதமும் குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவில் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், உயிரிழப்பும் குறைந்து வருகிறது.

இந்தியாவில் கடந்த வாரத்தில் புதிதாக 23 லட்சத்து 87 ஆயிரத்து 663 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இந்த பாதிப்பு என்பது 16ம் தேதியுடன் முடிந்த வாரத்துக்கு முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில் 13 சதவீதம் குறைவாகும். உலக நாடுகளில் கடந்த வாரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் 13 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது பாதிப்பின் அளவில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. உயிரிழப்புகளைப் பொறுத்தவரை இந்தியாவில் 27,992 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.