கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள், கேஸ் சிலிண்டர் வழங்கப்படாது – ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு!

Scroll Down To Discover

மகாராஷ்டிராவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி விரைவுப்படுத்தப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை 74 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

சமீபத்தில் மாவட்ட வாரியாக கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் விவரம் வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் உள்ள 36 மாவட்டங்களில் அவுரங்காபாத் 26-வது இடத்தை பெற்று பின்தங்கியுள்ளது. இந்த மாவட்டத்தில் வெறும் 55 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

அண்மையில் சுமார் 40 மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடியபோது, தடுப்பூசி போட்டவர்களின் விகிதத்தை உயர்த்தும்படி அவுரங்காபாத் கலெக்டருக்கு அறிவுறுத்தினார்.

இந்நிலையில், ஒரு டோஸ் தடுப்பூசி கூட இன்னும் போடாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள், கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் வழங்கப்படாது என அவுரங்காபாத் மாவட்ட கலெக்டர் சுனில் சவன் தெரிவித்துள்ளார்.. அதன்படி சம்பந்தப்பட்ட இடங்களுக்கு வரும் மக்களிடம் பணியில் இருக்கும் ஊழியர்கள், ‘கொரோனா தடுப்பூசி’ செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை சரிபார்த்த பின்னரே பொருட்களை கொடுக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்றும் ஆட்சியர் சுனில் சவன் தெரிவித்துள்ளார். தடுப்பூசி போட்டவர்களின் விகிதத்தை உயர்த்தவே இந்நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவுரங்காபாத் கலெக்டர் சுனில் சவன் தெரிவித்துள்ளார்.