கொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கிற்கு ரூ.15 ஆயிரம் ஆந்திர அரசு அறிவிப்பு

Scroll Down To Discover

கொரோனா பாதிப்பால் உயிர் இழந்தவர்களுக்கு கண்ணியமான இறுதி சடங்குகளை நடத்தும் வகையில் இறுதிச் சடங்குகளை நடத்த ஆந்திர மாநில அரசு குடும்பத்திற்கு ரூ .15,000 அறிவித்துள்ளது.

ஏழை, எளிய மக்கள் தங்கள் குடும்பத்தாரில் ஒருவர் கொரோனாவால் திடீரென உயிரிழக்கும்போது, அவர்களுக்கான இறுதிச்சடங்கிற்கு பணமில்லாமல் சிரமப்படுவதாக கடந்த ஆண்டு செய்திகள் வெளியாகின. இதையடுத்து, ‘இறுதிச்சடங்கிற்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்’ என, முதல்வர் ஜெகன்மோகன் அப்போதே அறிவித்திருந்தார். அந்த திட்டத்தை இப்போது மீண்டும் தொடர்ந்துள்ளார்.

இது குறித்து ஆந்திர அரசின் தலைமைச் செயலர் அனில் குமார் சிங்கால், ”ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த மாநிலத்தில் 2.07 லட்சம் பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். 9,271 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இறுதிச் சடங்கு செய்ய ரூ.15 ஆயிரம் அரசு சார்பில் வழங்க, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுமதியளிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான ஒதுக்கப்பட்ட நிதியை இந்த செலவினங்களுக்குப் பயன்படுத்தலாம். மாநில சுகாதாரத்துறை மற்றும் குடும்பநலத்துறை ஆணையர் இதற்குரிய நிதியை மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒதுக்கீடு செய்வார்,” எனத் தெரிவித்துள்ளார்.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இந்த நிவாரணத் தொகையை வழங்குவதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கொரோனா உயிரிழப்புக்கும் இந்த நிவாரண நிதி அளிக்கப்படும்.மே 16 ம் தேதி, ஆந்திர மாநில அரசின் முதன்மை செயலாளர் அனில் குமார் சிங்கால் இந்த உத்தரவை பிறப்பித்த்து உள்ளார்.