குறவர் பிரதிநிதியை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அவமதிப்பதுதான் சமூக நீதியா? – சீமான் கேள்வி..?

Scroll Down To Discover

மனு அளிக்க வந்தவர்களை அலட்சியப்படுத்தி அவமதிப்பதுதான் சமூக நீதியா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

நரிக்குறவர் நல வாரியத்தில் குறவர் என்பதை நீக்க வேண்டும் என்பது அச்சமூகத்தினரின் கோரிக்கை. மேலும் குறவர் இனத்தின் பெயரை பிற சமூகத்தினரின் பெயரோடு இணைத்து பயன்படுத்தக்கூடாது என்கின்றனர் அச்சமூகத்தினர். இக் கோரிக்கைகளை வலியுறுத்தி வன வேங்கைகள் கட்சியினர் ராஜபாளையத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். வனவேங்கைகள் கட்சித் தலைவர் ரணியன் தலைமையில் இப்போராட்டம் நடத்தப்பட்டது.
https://twitter.com/DrGunasekarAC/status/1573505682782834688?s=20&t=R5L9sMVWrpjY_zp9nUaIKQ
இந்த போராட்டம் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், ரணியன் கோரிக்கை மனு அளிக்க சென்றார்; ஆனால் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ரணியனுக்கு இருக்கை கூட தராமல் அவமதித்துவிட்டார் என சர்ச்சை வெடித்தது. இது தொடர்பாகவும் தேனியில் குறவர் சமூக மக்கள் போராட்டம் நடத்தினர்.

இது குறித்து சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- ஆதித்தொல்குடியான குறவர் சமூக மக்களின் உரிமைகளுக்காக 6 நாட்களாகப் பட்டினிப் போராட்டம் நடத்திய வனவேங்கைகள் கட்சியின் தலைவர் இரணியன், தங்களது கோரிக்கைகள் குறித்தான மனுவை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடம் அளிக்கச் சென்றபோது அவமதிக்கப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். இரணியன் உள்ளிட்டவர்களுக்கு அமர இருக்கைகூட அளிக்கப்படாததோடு, அவர்களை நிற்க வைத்தே பேசி அனுப்பி, பக்கத்தில் வராதே என கூறி அவமதித்தது பெரும் மன வலியைத் தருகின்றது.

இம்மண்ணின் தொல்குடி மக்களை சக மனிதராகக்கூட மதியாது அலட்சியப்படுத்துவதும், அவமதிப்பதும்தான் திராவிட மாடல் ஆட்சியா? இதுதான் பெரியாரும், அண்ணாவும் கற்றுத் தந்த சமத்துவ உணர்ச்சியா? மனு அளிக்க வந்தவர்களின் கோரிக்கைகளை ஏற்பது, புறந்தள்ளுவது என்பதையெல்லாம் கடந்து, வந்தவர்களுக்கு உரிய மானுட மதிப்பை அளித்திட வேண்டாமா? இந்த ஆண்டை மனப்பான்மையைத்தான் திராவிட இயக்கம் கற்றுத் தந்ததா? வெட்கக்கேடு! அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் இத்தகைய அணுகுமுறைக்கு எனது வன்மையானக் கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்.

குருவிக்காரர்கள், அக்கி பிக்கி, நக்கில்லே போன்ற சமூகத்தினரை குறவர்கள் என அடையாளப்படுத்துவது வரலாற்றுத்திரிபென எடுத்துக்கூறி, குறவர் சமூகத்தினருக்குத் தனி இடஒதுக்கீடு கோரும் அவர்களது கோரிக்கை என்பது மிக நியாயமானது. அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. ஆகவே, வனவேங்கைகள் கட்சியின் தலைவர் இரணியன் முன்வைக்கும் கோரிக்கையின் பக்கமிருக்கும் தார்மீகத்தை உணர்ந்து, அதனை நிறைவேற்றித் தர முன்வர வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.