கும்பகோணம் மாநகராட்சி : முதல் மேயராகிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்..!

Scroll Down To Discover

தமிழகத்திலேயே இரண்டு மாநகராட்சிகள் கொண்ட மாவட்டம் தஞ்சாவூர். தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கும்பகோணம் மாநகராட்சியில் முதன் முறையாக, 48 வார்டுகளுக்கு நகர் புற உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.

இதில், தி.மு.க., 38 வார்டுகளிலும், காங்கிரஸ் கட்சி 2 வார்டுகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலா ஒரு வார்டுகளிலும் என 42 இடங்களில் தி.மு.க., கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றனர். சுயேட்சையும், அதிமுகவினரும் தலா மூன்று இடங்களில் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில், கும்பகோணம் மாநகராட்சியில் முதல் மேயர் பதவியை பெற தி.மு.க.,வினர் கடுமையாக முயற்சி செய்தனர். ஆனால், தி.மு.க., தலைமை மேயர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஓதுக்கீடு செய்தது.தலைமையின் இந்த அறிவிப்பால் தி.மு.க-வினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

அதன்படி, 17 வது வார்டில் போட்டியிட்ட, காங்கிரஸ் கட்சியின் நகர துணை தலைவரும், ஆட்டோ டிரைவராக உள்ள சரவணன், 42, என்பவர் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் சுமார் 10 ஆண்டாக கட்சி பொறுப்பில் உள்ளார். ஆட்டோ டிரைவரான சரவணன் மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் குஷியாகியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியில் வெற்றிபெற்ற சரவணன், அய்யப்பன் இருவரின் பயோடேட்டாவையும் காங்கிரஸ் கட்சித் தலைமை கேட்டு பெற்றிருந்தது. இந்த நிலையில், சரவணன் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 20 வருடங்களாக ஆட்டோ டிரைவராக இருந்துவரும் ஒருவர் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதை பலரும் வரவேற்கின்றனர்.