குடும்ப அட்டைதாரர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கை: உலகம் முழுவதும் கொரோனா பெரும் தொற்றின் காரணமாக 180க்கும் மேற்பட்ட நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் பொருளாதார பின்னடைவு சந்தித்து வருகின்றன. வேலையிழப்பு, வருவாயின்மை, வாழ்வாதார சீர்குலைவு, பட்டினி என எண்ணிடங்க துயரங்களை நாட்டு மக்கள் சந்தித்து வருகின்றன.
இப்படி பலவகையிலும் இன்னலுக்கு ஆளான மக்கள் நிலைகுலைந்து போய் நிற்கின்றனர். மக்களின் துன்பங்களை அறிந்து அவர்களுக்கு தோளோடு தோள் நின்று துக்கி விடும் பணியை செய்ய வேண்டிய மத்திய, மாநில அரசுகள் மாறாக சுங்ககட்டணம் வசூலிப்பது, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு என மேலும் பல சுமைகளை மக்கள் மீது திணித்து வருகின்றனர்.
தமிழக மக்களே இன்னும் மக்கள் கூடுதலாக பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். நிவர் புயல், புரெவி புயல், டெங்கு காய்ச்சல் என பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர். அமைப்பு சாரா தொழிலாளர்கள், தினக்கூலி என பலத்தரப்பட்ட உழைக்கும் மக்களுக்கு கொரோனா காலக்கட்டத்தில் நிவாரண உதவி தருவதாக, ஒரு தரப்பு மக்களுக்கு மட்டும் அளித்து விட்டு ஏமாற்றி விட்டது.
அதே போன்று கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் 7 மாதகாலமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக தமிழக மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இவர்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே நிவாரண உதவியாக தமிழக அரசு வழங்கிவிட்டு தப்பித்து கொண்டது.பிறந்த குழந்தை எப்படி மெல்ல மெல்ல வளர்ந்து தட்டு தடுமாறி நடக்க தொடங்குவது போல, தற்போது மக்கள் மெல்ல தங்களது இயல்பு நிலைக்கு திரும்ப வந்த நிலையில், நிவர் புயல், புரெவி புயல் போன்றவற்றால் மீண்டும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.திறக்காத பள்ளிகளுக்கு கல்விக்கட்டணம் என்ற பெயரில் தனியார் பள்ளிகளுக்கு வசூல் வேட்டை நடத்தி தங்களது பைகளை நிரப்பி கொண்டு விட்டன.
இதை பற்றியெல்லாம் கவலைப்படாத அரசாக தமிழக அரசு இருந்து வருவதுதான் வேதனை அளிக்கூடிய விஷயம்.கஜா புயலின் போதும் தமிழகம் முழுவதும் வறட்சி நிலவிய காரணத்தால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்படும் என 110 விதியின் கீழ் தமிழக அரசு முதல்வர் அறிவித்து, அது காற்றில் அறிவிப்பு காற்றில் பறந்து கரைந்து விட்டது.
நேற்று தனது சட்டபேரவை தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ள முதல்வர், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கப்படும் என அறிவித்து இருப்பது. மக்களை ஏமாற்றி வாக்குக்களை பெற்றுவிடலாம் என நினைத்து கொண்டு இருக்கிறார். யானை பசிக்கு சோளப்பொறி போன்று உள்ளது தமிழக முதல்வரின் அறிவிப்பு, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தமிழக மக்களை காப்பாற்ற வேண்டுமென்றால் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கினால் மட்டுமே, ஆட்சியாளர்கள் தமிழக மக்களுக்கு இழைத்த பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
Leave your comments here...