குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, 5 முன்னாள் பிரதமர்கள், 40 முன்னாள், இந்நாள் முதல்வர்கள், 350 எம்.பி.க்கள் உட்பட சுமார் 10 ஆயிரம் இந்திய பிரபலங்களை சீன நிறுவனம் உளவு பார்த்திருப்பது அம்பலமாகி உள்ளது.
இந்தியா, இந்தோனேசியா, மலேசியா உட்பட சுமார் 22-க்கும் மேற்பட்ட அண்டை நாடுகளின் நிலம், கடல் எல்லைப் பகுதிகளை ஆக்கிரமிக்க சீனா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இந்தியா – சீனா இடையே தற்போது எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் இந்தியப் பயனாளிகள் தொடர்பான தகவல்கள் திருடப்படுவதாகக் கூறி ‘டிக்டாக்’ உட்பட சீனாவைத் தலைமையிடமாக வைத்து செயல்படும் 100க்கும் மேற்பட்ட அலைபேசி செயலிகள், சமூக வலைதளங்கள், இணைய தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த ‘ தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’, ஆஸ்திரேலியாவை சேர்ந்த `ஆஸ்திரேலியன் பைனான்ஷியல் ரீவியூ’, பிரிட்டனை சேர்ந்த ‘டெய்லி டெலிகிராப்’ உள்ளிட்ட ஊடகங்கள் வாயிலாக சீன நிறுவனத்தின் திரைமறைவு ரகசியங்களை பேராசிரியர் கிறிஸ்டோபர் பால்டிங் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
சீனாவின் ஷென்சென் நகரை தலைமையிடமாக வைத்து செயல்படும் ஷென்ஹூவா தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு தகவல்களை திரட்டி தரும் சேவைகளை செய்து வருவதாக தன் இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் சீன அரசுக்காக இந்தியா உட்பட பல நாடுகள் தொடர்பான தகவல்களை அளித்து வருவதாகவும் அதில் குறிப்பிடப் பட்டுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இந்தியாவைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரபலங்கள் குறித்த தகவல்களை அந்த நிறுவனம் திரட்டியது தெரிய வந்துள்ளது. குறிப்பிட்ட நபரின் நெருங்கிய உறவினர்கள் குறித்தும் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. தன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை திட்டமிடுவதற்கு இந்தத் தகவல்கள் சீன அரசுக்கு உதவுவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா, அவருடைய குடும்பத்தார், முதல்வர்களில் மம்தா பானர்ஜி, அசோக் கெலாட், அமரீந்தர் சிங், உத்தவ் தாக்கரே, நவீன் பட்நாயக், சிவராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர்களில் ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, பியுஷ் கோயல், முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் ஆகியோர் வேவு பார்க்கப்பட்டுள்ளனர்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே மற்றும் நீதிபதிகள், தொழிலதிபர்களான ரத்தன் டாடா, கவுதம் அதானி, அம்பானி சகோதரர்கள் என பட்டியல் நீள்கிறது. மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத், சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் என பல அரசியல் தலைவர்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
தற்போது அம்பலமாகியுள்ள சீனாவின் உளவு மோசடிக்கு பின்னால் மிகப்பெரிய சதித் திட்டங்கள் ஒளிந்திருக்கக் கூடும் என்று சர்வதேச பாதுகாப்புத் துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Leave your comments here...