குடிபெயர்ந்த தொழிலாளர்களை, சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்ப, மத்திய அரசிடம் என்ன திட்டம் உள்ளது.? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம், ‘நோட்டீஸ்’

Scroll Down To Discover

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக, ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து, நாட்டின் பல பகுதிகளில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இவர்கள் கூட்டம் கூட்டமாக, சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட நிலையில், பதற்றம் ஏற்பட்டது. இவர்கள், அரசு ஏற்பாடு செய்துள்ள தற்காலிக முகாம்களில், தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்கு செல்ல, மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு, நீதிபதிகள், என்.வி.ரமணா, எஸ்.கே.கவுல், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய, ‘வீடியோ கான்பரன்ஸ்’ அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். குடிபெயர்ந்த தொழிலாளர்களின் அடிப்படை உரிமையை காக்க, மத்திய அரசு தவறிவிட்டதாக வாதிட்டார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘குடிபெயர்ந்த தொழிலாளர்களை, தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்ப, மத்திய அரசிடம் என்ன திட்டம் உள்ளது’ எனக் கேட்டு, ‘நோட்டீஸ்’ அனுப்ப உத்தரவிட்டனர்.