கிரிப்டோ கரன்சிகளில் பதுக்கினாலும் பணமோசடி வழக்கு பாயும் – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.!

Scroll Down To Discover

கிரிப்டோ கரன்சிகளில் பதுக்கினாலும், முறைகேடாக சொத்து சேர்த்தாலும் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பாயும் என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

டிஜிட்டல் கரன்சி மற்றும் என்எப்டி போன்ற டிஜிட்டல் சொத்துகள் கடந்த 2 ஆண்டுகளில் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்தியாவிலும் ஏராளமான கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச்கள் தொடங்கப்பட்டதன் மூலம் டிஜிட்டல் கரன்சி வர்த்தகம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஆனாலும், இத்தகைய சொத்துக்களை ஒழுங்குபடுத்துவது அல்லது வரி விதிப்பது தொடர்பாக இந்தியாவில் தெளிவான கொள்கை வகுக்கப்படாமல் இருந்தது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் கிரிப்டோ உள்ளிட்ட மெய்நிகர் சொத்துகள் மூலம் ஈட்டப்படும் வருவாய்க்கு 30 சதவீத வரி விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தற்போது டிஜிட்டல் சொத்துகள் மீதான கண்காணிப்பை கடுமையாக்கும் நோக்கில் கிரிப்டோகரன்சிகள் அல்லது மெய்நிகர் சொத்துகளும் பணமோசடி தடுப்பு சட்ட விதிகளின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது.

எனவே, கிரிப்டோ வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் அதன் தொடர்புடைய நிதி சேவைகளுக்கு இனி பணமோசடி தடுப்பு சட்டம் பொருந்தும். இதில் சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைகளை இந்திய கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்கள் ஒன்றிய நிதி புலனாய்வு பிரிவிடம் இனி புகாரளிக்க வேண்டும். சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை கிரிப்டோ கரன்சிகளில் பதுக்கினாலும் பணமோசடி தடுப்பு சட்டம் பாயும் என்பது குறிப்பிடத்தக்கது.