காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கிய 30 பேரை மீட்ட ராணுவ வீரர்கள்..!

Scroll Down To Discover

காஷ்மீரில் கடுமையாக பனி பொழிந்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் பல இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குப்வாரா மாவட்டத்தில் உள்ள டாங்தார்-சவுகிபால் சாலையில் நேற்று சிலர் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. வாகனத்தில் பயணித்தவர்கள் அதிலிருந்து குதித்துவிட்டாலும் பனியில் சிக்கிக்கொண்டனர். வாகனத்தை முழுமையாக பனி மூடிவிட்டது.

இதுகுறித்து அருகில் உள்ள ராணுவப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து சென்ற ராணுவத்தினர், பனியில் சிக்கிய ஒரு குழந்தை உள்ளிட்ட அனைவரையும், அவர்களது வாகனத்தையும் மீட்டனர்.

அதே சாலையில் சற்றுத் தொலையில் பனிச்சரிவில் சிக்கிய வேறு பலரையும் ராணுவம் காப்பாற்றியது. மொத்தம் 30 பேரும், 12 வாகனங்களும் பனிச்சரிவில் இருந்து மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் உணவு, மருத்துவ உதவியுடன், இரவில் தங்கும் வசதியும் அளிக்கப்பட்டதாக ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.