காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் அதிரடி கைது – சினிமா பாணியில் மடக்கிய பஞ்சாப் போலீஸ்..!

Scroll Down To Discover

சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் தனி நாடு கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து காலிஸ்தான் தனி நாடு என அறிவிக்க வேண்டும் என்பதே அந்த கோரிக்கை. கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் வலியுறுத்தல் இல்லாத நிலையில், சமீப காலமாக காலிஸ்தான் பிரிவினைவாதம் மீண்டும் தலைதூக்கி உள்ளது.

காலிஸ்தான் பிரிவினைவாதம் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வந்த சீக்கிய மதபோதகர் அம்ரித்பால் சிங்கை இன்று போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அம்ரித்பால் சிங் ஜலந்தரின் ஷாகோட் பகுதிக்கு இன்று வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து அவரை கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். அவர் தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்றபோது, போலீசார் சினிமா பாணியில் அவரை விரட்டி மேஹத்பூர் கிராமத்தில் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வதந்திகள் பரவாமல் இருக்க நாளை மதியம் 12 மணி வரை இணையதள சேவை மற்றும் எஸ்எம்எஸ் சேவை முடக்கப்பட்டுள்ளது. நடிகர் தீப் சித்துவால் தொடங்கப்பட்ட ‛வாரிஸ் பஞ்சாப் தே” என்ற அமைப்பின் தலைமை பொறுப்பில் அம்ரித்பால் சிங் உள்ளது குறிப்பிடத்தக்கது.