கர்நாடகாவில் கட்டாய மதமாற்றத்தை தடை செய்ய அவசர சட்டம்..!

Scroll Down To Discover

கர்நாடக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாகவும், இதை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும் என்றும் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தார்.

அதன் படி, கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் வகையில் கர்நாடக மத சுதந்திர உரிமை பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் மசோதா அம்மாநில சட்டசபையில், கடந்தாண்டு டிசம்பரில் நடந்த கூட்டத்தொடரில், சட்ட மசோதா தாக்கல் செய்து, நிறைவேற்றப்பட்டது.

இதன்படி இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். இந்த சட்ட மசோதாவிற்கு காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கர்நாடகா சட்ட மேலவையில் இந்த மசோதாவை ஆளும் கட்சியால் நிறைவேற்ற முடியவில்லை.

இந்நிலையில், கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மதமாற்றத் தடைச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான அவசரச் சட்டம் கொண்டுவர ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா சட்டத்துறை அமைச்சர் மதுசுவாமி, தற்போது சட்டசபை கூட்டத் தொடர்
இல்லாததால், அவசரச் சட்டத்தை அமல்படுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்றார்.

கடந்த டிசம்பர் மாதம் சட்டசபையில் நிறைவேற்ற சட்ட மசோதாவில் உள்ளபடி எந்த திருத்தமும் இல்லாமல் அவசரச் சட்டமாக மாற்றப்படும் என்றும், அடுத்த கூட்டத் தொடரில் அவசர சட்ட அரசாணை சட்ட மேலவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.