கடல்சார் பாதுகாப்பு – இந்திய பிரதமர்களில் முதல் முறையாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய பிரதமர் மோடி.!

Scroll Down To Discover

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக இந்தியா நியமிக்கப்பட்டுள்ளது. ஆக., மாதத்துக்கு கவுன்சிலுக்கு தலைமை வகிக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு மெய்நிகர் முறையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

கவுன்சிலில் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பொது விவாதம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமையேற்றார். இந்தியப் பிரதமர் ஒருவர், கவுன்சிலின் கூட்டத்தை தலைமையேற்று உரையாற்றுவது இதுவே முதல் முறை.


இந்தக் கூட்டத்தில் ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது: பெருங்கடல்கள், நமது பகிரப்பட்ட மற்றும் உலக அளவில் பொதுவானவை ஆகும். அவை சர்வதேச வர்த்தகத்தின் உயிர்நாடியாகும். எல்லாவற்றிற்கும் மேலாக அவை நமது கிரகத்தின் எதிர்காலத்திற்கும் முக்கியம். ஆனாலும் இந்த பொதுவான கடல் பாரம்பரியமானது கொள்ளை, பயங்கரவாதம் மற்றும் நாடுகளுக்கு இடையேயான சர்ச்சைகள் என பல்வேறு வகையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது.

இந்த சூழலில் கடல்சார் பாதுகாப்புக்கு 5 அடிப்படை கொள்கைகள் முக்கியமானது. இதில் முதலாவதாக, முறையான கடல் வர்த்தகத்துக்கான தடைகளை நீக்க வேண்டும். அடுத்ததாக இயற்கை பேரழிவுகள் மற்றும் அரசு சாரா கடல் அச்சுறுத்தல்களை கூட்டாக எதிர்த்து முறியடிக்க வேண்டும்.

இதைப்போல கடல்சார் சூழல் மற்றும் பெருங்கடல்களைப் பாதுகாக்க வேண்டும். மேலும், கடல் வணிகத்திற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். இறுதியாக, நாடுகளுக்கு இடையேயான கடல்சார் சர்ச்சைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும். இது நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும் உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் மிகவும் முக்கியம்.

இந்த புரிதல் மற்றும் முதிர்ச்சியின் மூலம்தான், வங்கதேசத்துடனான கடல்சார் சர்ச்சையை இந்தியா தீர்த்துக்கொண்டது. கடல் பாதுகாப்பு குறித்த கூட்டு கொள்கையை உருவாக்குவதற்கு தேவையான வழிமுறைகளை மேம்பட்ட விவாதங்கள் வழங்கும் என்று நம்புகிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்.