கங்கை ஆற்றில் இறந்தவர்களின் உடல்கள் : பாதுகாப்பான முறையில் உடல்களை அப்புறப்படுத்த உ.பி., பிஹார் அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு.!

Scroll Down To Discover

நாட்டில் கொவிட்-19 பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில், ஏராளமான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. உயிரிழந்தவர்களின் உடல் பாதி எரிந்த நிலையிலோ அல்லது, அழுகிய சடலமாகவோ கங்கை ஆற்றிலும் அதன் கிளை ஆறுகளிலும் அண்மைக்காலங்களில் வீசப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு எதிராக உத்தரப்பிரதேசம் மற்றும் பிஹாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மத்திய ஜல் சக்தி செயலாளர் பங்கஜ் குமார், மே 15 அன்று ஆய்வு நடத்தினார்.

இது சம்பந்தமாக ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளை சுட்டிக்காட்டிய செயலாளர், விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் கங்கை மற்றும் பிற நதிகளைச் சுற்றியுள்ள நகர மற்றும் ஊரகப் பகுதிகளில் சமமாக கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தினார்.

இறந்தவர்களின் உடலை வீசாமல் தடுப்பதுடன் அவற்றை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தி, தண்ணீரின் தரத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக மாநிலங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தெரியவந்த பிறகு, மத்திய நீர் ஆணையம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் தங்களது கருத்துக்களையும், செயல்திட்டங்களையும் வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

பல்வேறு மாவட்டங்களுடன் இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தூய்மை கங்கா தேசிய இயக்கத்தின் தலைமை இயக்குநர் ராஜீவ் ரஞ்சன் மிஸ்ரா கூறினார். இறந்தவர்களின் உடலை தகனம் செய்வதற்காக குடும்பத்தினருக்கு ஆதரவு அளிப்பதுடன், விழிப்புடன் செயல்பட்டு நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.