ஓடிடி தளங்களில் தவறான விஷயங்களை ஏற்றுக் கொள்ள முடியாது.. வரம்பை மீறினால், நடவடிக்கை – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் எச்சரிக்கை..!

Scroll Down To Discover

படைப்பாற்றல் என்ற பெயரில் ஓடிடி தளங்களில் தவறான விஷயங்களை ஏற்றுக் கொள்ள முடியாது, வரம்பை மீறினால், நடவடிக்கை மேற்கொள்வதில் இருந்து அரசு பின்வாங்காது என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் எச்சரித்துள்ளார்.

இந்தியாவில், பாரம்பரிய தொலைக்காட்சி மற்றும் தியேட்டர் மீது ஓடிடி இயங்குதளங்களின் ஆதிக்கம் கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த ஓடிடி தளங்களில் பயனர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் திரைப்படங்கள், தொடர்கள் மற்றும் வலைத்தொடர்களை காணும் அளவிற்கு வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற ஓடிடி தளங்களில் ஆபாச உள்ளடக்கம் அதிகரித்து வருவதாக புகார்கள் அவ்வப்போது எழுந்த வண்ணம் உள்ளன.

இது போன்ற விதிமீறல்களை கண்காணித்து மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக எச்சரித்துள்ளது. மேலும் இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். நாக்பூரில் செய்தியாளர்களை அவர் சந்தித்து ஓடிடி தளத்தில் அதிகரித்து வரும் ஆபாச மற்றும் தவறான வார்த்தைகள் பிரயோகம் குறித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, “ஓடிடி தளங்களில் அதிகரித்து வரும் தவறான மற்றும் ஆபாசமான உள்ளடக்கம் பற்றிய புகார்கள் குறித்து அரசு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. படைப்பாற்றல் என்ற பெயரில் தவறான விஷயங்களை பொறுத்துக்கொள்ள முடியாது. இது தொடர்பான விதிகளில் ஏதேனும் மாOற்றம் செய்ய வேண்டியிருந்தால், அதை பரிசீலிக்க அமைச்சகம் தயாராக உள்ளது.

இந்த தளங்களில் படைப்பாற்றலுக்கான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதே தவிர, ஆபாசத்திற்கு அல்ல. மேலும் படைப்பாற்றல் என்ற பெயரில் யாராவது வரம்பை மீறினால், ஆபாசம் மற்றும் அதீத வன்முறையைப் பிரதிபலிக்கும் படைப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை மேற்கொள்வதில் இருந்து அரசு பின்வாங்காது’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.