ஒரே ஆண்டில் 43,000 போக்சோ வழக்குகள் – சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்

Scroll Down To Discover

நாடு முழுவதும் ஒரே ஆண்டில் போக்சோ சட்டத்தின்கீழ் 43 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே போக்சோ வழக்கில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை, நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது.

இது குறித்து தேசிய குழந்தைகள் காப்பக ஆணையம் கூட தனது வருத்ததை பதிவு செய்திருந்தது. குறிப்பாக, மகாராஷ்டிராவில் ஆடையணிந்த சிறுமியை தொட்டது பாலியல் சீண்டலாகாது என தெரிவித்து, குற்றம் சாட்டப்பட்ட நபரை மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்தது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு எதிராக ஒன்றிய அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் யு.யு.லலித், அஜய் ரஸ்தோகி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ‘மருத்துவ அறுவை சிகிச்சைக்கான கையுறை அணிந்து கொண்டு ஒரு பெண்ணின் முழு உடலையும் தொட்டால், மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அதி கண்டிப்பாக பாலியல் சீண்டலாக கருத முடியாது. அதற்காக, அந்த நபரை தண்டிக்கவும் முடியாது.

இதில், ஒரு பெண்ணை உடலோடு உடல் தொடும்போது மட்டுமே பாலியல் சீண்டல் எனப்படும். குறிப்பாக, இது போன்ற பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை காக்கும் விதமாக ஒரு ஆண்டில் மட்டும் போக்சோ சட்டத்தின் கீழ் 43 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது,’ என தெரிவித்தார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சதீஷ் சார்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகததால், அவர் சார்பில் வக்கீல் ஒருவர் ஆஜராக உச்ச நீதிமன்ற சட்டப்பணிகள் குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.