ஏழை எளிய மக்கள் மீது ஆளும் தி.மு.கவிற்கு அக்கறை இல்லை – திமுக மீது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு..!

Scroll Down To Discover

சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அயோதியபட்டனம் பேரூராட்சி பகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “தமிழகம் முழுவதும் மக்களின் முகமலர்ச்சியில் அதிமுகவின் வெற்றி தெரிகிறது. தில்லு முள்ளு செய்து ஜெயித்துவிடலாம் என்ற திமுகவின் எண்ணம் இந்த தேர்தலில் பலிக்காது.

கடந்த 9 மாத காலம் தமிழகத்தில் அலங்கோல ஆட்சி நடப்பதால் மக்களை சந்திக்க அஞ்சுவதால் திமுகவினருக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. திமுக ஆட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி அதிமுகவுக்கு சாதகமாக உள்ளது. மு.க.ஸ்டாலின் கூறுவது போல் சட்டமன்ற தேர்தல் தோல்வியால் எனக்கு மனுளைச்சல் கிடையாது. என்னை பொறுத்தவரை, என்றும் நான் தொண்டனாக இருந்து பதவிக்கு வந்தவன்; எனக்கு பதவி வெறி கிடையாது.

அதிமுக ஆட்சியில் 52 லட்சம் மாணவ மாணவியிருக்கு விலையில்லா மடி கணிணி வழங்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் கல்வியில் ஏற்படுத்தப்பட்ட மறுமலர்ச்சி காரணமாக கல்வித்தரம் உயர்ந்திருக்கிறது. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இப்படியாக நாம் பெற்றெடுத்த குழந்தைக்கு ஸ்டாலின் பெயர் வைத்துக் கொண்டிருக்குறார்.

ஏழை எளிய மக்கள் மீது ஆளும் தி மு க விற்கு அக்கறை இல்லை. எடப்பாடி பழனிசாமி ஏழைகளுக்காக தொடங்கப்பட்ட அம்மா கிளினிக் வஞ்சகத்தன்மையோடு மூடிவிட்டது. கொரோனா காலகட்டத்தில் பலரது பசியாற்றிய அம்மா உணவகங்களை எப்படியாவது மூடிவிட வேண்டும் என்று முயற்சிக்கின்றனர்” எனக் கூறினார்.