ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் சுங்கச் சாவடிகள் மீண்டும் செயல்படத் தொடங்கும் – தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

Scroll Down To Discover

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 2ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த மாா்ச் 25ஆம் தேதி முதல் அவசரகால சேவைகளை எளிதாக்குவதற்காக தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டண வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் சுங்கச் சாவடிகள் மீண்டும் செயல்படத் தொடங்கும் என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் என்எச்ஏஐ-க்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலை போக்குவரத்து அமைச்சகத்துக்கு கடந்த 11 மற்றும் 14-ஆம் தேதிகளில் அனுப்பிய கடிதத்தில், ‘மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிப்பது ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டது.சுங்க கட்டண வசூல் என்பது அரசு கருவூலத்திற்கு பங்களிக்கக்கூடிய முக்கிய நிதி ஆதாரமாக உள்ளதாலும், பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாலும் மீண்டும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க வசூலை வரும் 20-ஆம் தேதி முதல் தொடங்க வேண்டியது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த உத்தரவுக்கு அகில இந்திய மோட்டாா் போக்குவரத்து காங்கிரஸ் (ஏஐஎம்டிசி) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.