எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றாலோ, அல்லது அதற்கும் அதிகமாக தண்டிக்கப்பட்டாலோ, அந்த நபர் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை உள்ளது. இந்த தடையை ஆயுள் முழுவதும் நீட்டிக்குமாறு தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஜே.பி. பர்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை, சிறப்பு அமர்வுகளை அமைத்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தானாக முன்வந்து வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிப்பது தொடர்பான விசாரணை நீதிமன்றங்களுக்கு, ஒரே மாதிரியான வழிகாட்டுதல்களை உருவாக்குவது கடினம் என்று கூறிய உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தை உயர்நீதிமன்றங்களிடமே விட்டுவிடுவதாக தெரிவித்துள்ளது
மேலும் எம்.பி.-க்கள், எம்.எல்.ஏ.-க்களின் மீதான வழக்குகளின் நிலவரத்தை அறிய அந்தந்த உயர்நீதிமன்ற இணையதளத்தில் வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும், சிறப்பு நீதிமன்றங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை நீதிபதிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
Leave your comments here...