‘எம்புரான்’பட தயாரிப்பாளர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை திடீர் சோதனை..!

Scroll Down To Discover

பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ள எம்புரான் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ‘லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகமாக பிரித்விராஜ் இயக்கத்தில் ‘எல்2 எம்புரான்’ திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை கோகுலம் மூவிஸ், லைகா புரொடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இதில் ஹிந்து மதத்தினரை புண்படுத்தும் விதமாக சில காட்சிகள் இடம் பெற்றுள்ளது என்று சர்ச்சை கிளம்பியது. இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த பலர் படத்தின் சில காட்சிகளை நீக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன்படி 2 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டன. நடிகர் மோகன்லால் இந்த காட்சிகள் குறித்து தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

அதேபோல, முல்லைப் பெரியாறு அணை குறித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தமிழகத்திலும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.

இந்த நிலையில், கோகுலம் குழும நிறுவனங்களில் ஒன்றான கோகுலம் சிட்பண்ட்ஸ் நிதி நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோகுலம் கோபாலன் வீடு உள்பட கோகுலம் சிட்பண்ட் தொடர்பாக 5 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோகுலம் குழுமத்தின் ஒரு நிறுவனமான கோகுலம் மூவிஸ் தயாரித்த எம்புரான் திரைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்நிறுவனம் தொடர்பான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.