ஊழலுக்கு எதிரான புகார்களை எனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பலாம் : பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அதிரடி அறிவிப்பு..!

Scroll Down To Discover

இனி எந்த அதிகாரி உங்களிடம் லஞ்சம் கேட்டாலும் கொடுக்க மறுக்காதீர்கள். மாறாக, அந்த உரையாடலை வீடியோ அல்லது ஆடியோவாக பதிவு செய்து எனது அலுவலக எண்ணுக்கு அனுப்புங்கள் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அதிரடியாக அறிவித்துள்ளார்.

பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை அவருடைய மாளிகையில் சனிக்கிழமை சந்தித்து ஆட்சியமைப்பதற்கு உரிமை கோரினார் பகவந்த் மான்.

தொடர்ந்து, பதவியேற்பு விழாவானது பகத் சிங்கின் கிராமமான கட்கட் களானில் நேற்று நடைபெற்றது. அவருடன் 16 எம்எல்ஏ-க்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்விற்காக 100 ஏக்கர் பரப்பளவில் விழா அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.பதவியேற்பு விழாவில், ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு தலைவர்களும் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து, முதல்வராக பதவியேற்ற பின்னர் இன்று முதலாவதாக மாநிலத்தில் உள்ள உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள் உட்பட முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பகவந்த் மான், பஞ்சாபில் வரும் மார்ச் 23ம் தேதி முதல் ஊழலுக்கு எதிராக தனி உதவிமையம் அமைக்கப்படும். அதற்காக வழங்கப்படும் எண் என்னுடைய தனிப்பட்ட வாட்ஸ்அப் எண்ணாகவும் இருக்கும்.

பஞ்சாபில் இனி எந்த அதிகாரி லஞ்சம் கேட்டாலும், கொடுக்க மறுப்பு தெரிவிக்காதீர்கள். மாறாக, அந்த அதிகாரி மேற்கொள்ளும் உரையாடலை வீடியோ மற்றும் ஆடியோவாக பதிவு செய்து எனது எண்ணுக்கு அனுப்பி வையுங்கள். எனது அலுவலகம் அது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும். இதன் மூலம் எந்த குற்றவாளியும் இனி தப்ப முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.