ஊரடங்கு விதிமுறைகளை மீறி படப்பிடிப்பு – பிக்பாஸ் படப்பிடிப்பு அரங்கிற்கு சீல் வைத்த அதிகாரிகள்

Scroll Down To Discover

தமிழில் தனியார் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி, ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு ஷோவாக விளங்கி வருகிறது. சென்னை அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் மலையாள தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் மலையாள பிக்பாஸ் படப்பிடிப்பில் இருந்த 6 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது ஊரடங்கு விதிமுறைகளை மீறி தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல் வந்தது.

இதைத் தொடர்ந்து அங்கு படப்பிடிப்பு நடந்து வருவதாக வந்த தகவலையடுத்து பூந்தமல்லி உதவி ஆணையர் சுதர்சன், வட்டாட்சியர் சங்கர் ஆகியோர் படப்பிடிப்பு அரங்கிற்கு சென்று அங்கிருந்த நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து படப்பிடிப்பு அரங்கு நிர்வாகத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் படப்பிடிப்பு அரங்கின் 3 நுழைவாயில்களுக்கும் சீல் வைக்கப்பட்டது. படப்பிடிப்பில் பங்கேற்ற 60-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் முழுக்கவச உடை அணிவிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட்டனர். மேலும் ஈவிபி பிலிம் சிட்டி படப்பிடிப்பு தளம் முழுமைக்கும் சீல் வைக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.