ஊரடங்கு எதிரொலி – வீரகாளியம்மன் கோவிலின் 5 நாள் திருவிழா ஒரே நாளில் நடந்து முடிந்தது

Scroll Down To Discover

இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீரமாகாளியம்மன் கோவிலின் 69-வது ஆண்டு பங்குனி உற்சவ விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

இன்று அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றுக்கு சென்று பால்குடம் எடுத்து வந்து அம்மனை தரிசித்தனர். குறிப்பாக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தி,பறவைகாவடி எடுத்து அம்மனை தரிசித்தனர்.

குறிப்பாக ஒவ்வொரு வருடமும் இக்கோவில் திருவிழா 5 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.ஆனால் கரோனா தொற்று காரணமாக நாளைமுதல் திருவிழா,மற்றும் கோயில் நிகழ்ச்சிகள் மத வழிபாடுகள் நடத்துவதற்கு தடை என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனவே, ஒரேநாளில் திருவிழாவை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி பால்குடம் எடுத்தல்,ஊர் பொங்கல்,அக்னிசட்டி எடுத்து வருதல், முளைப்பாரி எடுத்து வீதிஉலா சுற்றுதல், திருவிளக்கு பூஜை என 5 நாட்கள் நடைபெறக்கூடிய இந்த திருவிழா இன்று ஒரே நாளில் நடந்து முடிந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நாளில் இக்கோயிலின் திருவிழாவில் கலந்து கொண்டதால் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.