கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் வரும் ஏப்.,14 வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அத்யாவசிய பணிகள் தவிர மற்றவர்கள் வெளியே வரக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு, சுகாதாரத் துறை, காவல்துறை சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் நோயின் தீவிரம் தெரியாமல் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஆங்காங்கே சுற்றி வருகின்றனர். அப்படி தடையை மீறி வெளியே வருபவர்களை காவல்துறையினர் எச்சரித்தும், அறிவுரைகள் வழங்கியும் அனுப்பி வருகின்றனர்.
அந்த வகையில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் ஒருவர், கொரோனா குறித்து நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். அப்படி அவர் என்ன செய்தார் என்றால், கொரோனா வைரஸ் வடிவிலேயே தனது தலைக்கவசத்தை மாற்றியுள்ளார். மாற்றியது மட்டுமில்லை, இந்தத் தலைக்கவசத்தை அணிந்து கொண்டு வாகனத்தில் முகக்கவசம்(மாஸ்க்) இல்லாமால் வருபவர்களை, மடக்கிப்பிடித்து ஏன் முகக்கவசம் அணியவில்லை என்று கேள்வி எழுப்பியது மட்டுமல்லாமல் தன்னை ஒரு கொரோனா வைரஸாகவே சித்தரித்துக் கொண்டு பேசியுள்ளார்.
அதில் அவர் , நான் உங்களைத் தொடவா தொட்டால் என்ன ஆகும் “ என வாகன ஓட்டிகளிடம் கேள்வி எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். மேலும் வில்லிவாக்கம் மார்க்கெட்டில் சென்று கடைவாசிகளிடமும், பொருட்களை வாங்குபவர்களிடமும் சமூக விலகல் குறித்தும், முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இவரது இந்த நூதன விழிப்புணர்வு பிரசாரம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
https://youtu.be/ub_zIgBex5g
Leave your comments here...