ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகையில் தமிழ்நாட்டிற்கு ரூ.1,803 கோடியை விடுவித்தது மத்திய அரசு.!

Scroll Down To Discover

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக, தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்களுக்கு ரூ. 12,351.5 கோடி மானியத்தை நிதி அமைச்சகத்தின் செலவினத்துறை விடுவித்துள்ளது. 2020-21 நிதியாண்டில் விடுவிக்கப்பட்ட அடிப்படை மானியத்தின் இரண்டாவது தவணைத் தொகை இதுவாகும்.

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் பரிந்துரையின்படி முதல் தவணைக்கான பயன்பாட்டு சான்றிதழை வழங்கிய 18 மாநிலங்களுக்கு மானியத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அடிப்படை மானியத்தின் முதல் தவணையாகவும், 14-ஆவது நிதி ஆணையத்தின் நிலுவைத் தொகையாகவும் மொத்தம் ரூ.18,199 கோடி, கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டது. அதேவேளையில் இணைப்பு மானியத்தின் முதல் தவணையாக ரூ. 15,187.50 கோடி மானியத் தொகை அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டது.

இதன் மூலம் அடிப்படை மானியங்களாகவும், இணைப்பு மானியங்களாகவும் மொத்தம் ரூ. 45,738 கோடியை மத்திய செலவினத் துறை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக மாநிலங்களுக்கு விடுவித்துள்ளது. இதில் தமிழகத்திற்கு ரூ. 1803.50 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.