மாநில உளவுத்துறை எச்சரிக்கை : சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பயங்கரவாத மிரட்டல் : உச்சகட்ட பாதுகாப்பு

Scroll Down To Discover

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாக்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை விழா கடந்த 17-ந்தேதி தொடங்கியது. இதற்கிடையே சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பயங்கரவாத மிரட்டல் இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது பற்றி உளவுத்துறையினர் மாநில டி.ஜி.பி.க்கு தகவல் தெரிவித்தனர்.

 

உளவுத்துறை அளித்துள்ள தகவலில் கூறியிருப்பதாவது:- சபரிமலையில் நடந்து வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த விழாவை சீர்குலைக்க சில பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. அவர்கள் மாறுவேடத்தில் கோவிலுக்குள் நுழைந்து அசம்பாவிதங்களை ஏற்படுத்தலாம். எனவே கோவிலின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை உயர் போலீஸ் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

மாநில உளவுத்துறையினர் அளித்த தகவலையடுத்து கேரள டி.ஜி.பி. அலுவலகம், மத்திய உளவுத்துறையின் உதவியை கோரியுள்ளது. மேலும் அண்டை மாநில போலீசாருக்கும், கேரளாவில் இருந்து தகவல் அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளை உஷார்படுத்திய டி.ஜி.பி. அலுவலகம், சபரிமலையிலும் பாதுகாப்பை அதிகரித்துள்ளது. நிலக்கலில் இருந்து பம்பை வரை கூடுதல் போலீஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சன்னிதானத்தில் 15 இடங்களில் மெட்டல் டிடெக்டர்கள் அமைத்துள்ளதோடு, 18-ம் படியேறும் பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.