உலக பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா – நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்..!

Scroll Down To Discover

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும்.

இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுகின்றனர். கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா நாளை (திங்கட்கிழமை) காலையில் தொடங்குகிறது. இதையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் மகுட இசை, இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்புக்கட்டுதல் நடக்கிறது.

தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். தினமும் காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மாலையில் மாலையில் சமயசொற்பொழிவு, பட்டிமன்றம், பரதநாட்டியம், இன்னிசை நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 5-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. அன்று காலை 10.30 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி மகிசாசூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

6-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்த பின் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருள்கிறார். அங்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. 2 மணிக்கு அம்மன் சிதம்பரேஷ்வரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி சாந்தாபிஷேக ஆராதனையும், அதிகாலை 3 மணிக்கு அம்மன் சிதம்பரேஸ்வரர் கோவில் அபிஷேக மேடையில் அபிஷேக ஆராதனையும், காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகை வீதி உலா புறப்படுதலும் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு காப்பு களைதல், நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம், 7-ந் தேதி மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடக்கிறது. விழாவையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்தும் குலசேகரன்பட்டினத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.