டில்லியில் நடந்த உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் 23 வயது பிரிவுக்கான கெட்டில்பெல் விளையாட்டில் மதுரை சொக்கிகுளம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கேஷினி ராஜேஷ் தங்கப் பதக்கம் வென்று இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார். மதுரை வந்த அவருக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் கேஷினி ராஜேஷ் கூறும்போது, ‘‘உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்ற போது தான் கெட்டில்பெல் விளையாட்டு குறித்து அறிந்தேன். இந்த விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டு நாட்டிற்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்ற நோக்கில் கடந்த இரண்டரை ஆண்டாக தீவிர பயிற்சி செய்தேன்.
தற்போது இந்திய அணிக்காக விளையாடி தங்கப் பதக்கம் வென்றுள்ளேன். கெட்டில்பெல் போட்டியில் இரண்டு கைகளிலும் சம அளவிலான 16 கிலோ எடையை கீழே விழாமல் தொடர்ந்து 10 நிமிடம் சைக்கிளிங் முறையில் செய்து காட்ட வேண்டும். இப்போட்டியில் இந்திய அளவில் வென்ற முதல் பெண்ணாக சாதனை படைத்துள்ளேன். அடுத்ததாக 20 கிலோ எடை பிரிவில் சாதிக்க பயிற்சி செய்கிறேன். உடற்பயிற்சி நிலையம் சென்ற போது உடம்பு மாறி விடும் என்று பலர் கூறினர்.
இதை பொருட்படுத்தாமல் வென்று சாதித்துள்ளேன். இப்போட்டியை பிரபலப்படுத்தி, பெண்கள் அதிகம் பேர் இந்த விளையாட்டில் சாதிக்க வேண்டும். எனது பெற்றோர், பயிற்சியாளர் விக்னேஷ் ஹரிஹரன் ஆகியோர் பெரிதும் ஊக்கமளித்தனர்’’ என்றார்.
Leave your comments here...