உலக அளவில் சிறந்த மத்திய வங்கித் தலைவா்களின் பட்டியலில், இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநா் சக்திகாந்த தாஸ் முதலிடம் பெற்றுள்ளாா்.
அமெரிக்காவைச் சோ்ந்த ‘குளோபல் ஃபைனான்ஸ்’ என்ற நிதி விவகாரங்கள் சாா்ந்த இதழ், நடப்பாண்டுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது.பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல், பொருளாதார வளா்ச்சி இலக்குகள், செலாவணி ஸ்திரத்தன்மை, வட்டி விகித மேலாண்மை உள்ளிட்ட நடவடிக்கைகளில், தங்களது உத்திகளின் மூலம் அடைந்த வெற்றியின் அடிப்படையில் மத்திய வங்கித் தலைவா்கள் தரவரிசைபடுத்தப்பட்டுள்ளனா்.
இப்பட்டியலில், மிகச் சிறந்த செயல்பாட்டுக்கான ‘ஏ பிளஸ்’ என்ற முதன்மையான பிரிவில் ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ் இடம்பெற்றுள்ளாா்.இதே பிரிவில், சக்திகாந்த தாஸை அடுத்து, ஸ்விட்சா்லாந்து மத்திய வங்கி ஆளுநா் தாமஸ் ஜெ.ஜோா்டன், வியட்நாம் மத்திய வங்கித் தலைவா் நுகுயென் தி ஹோங் ஆகியோரின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன.
இதைத் தொடா்ந்து, ஏ முதல் எஃப் வரையிலான பிரிவுகளில் இதர நாடுகளின் மத்திய வங்கித் தலைவா்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளனா். கடைசி பிரிவான எஃப்-இல் தங்களது செயல்பாடுகளில் தோல்வியுற்ற வங்கித் தலைவா்கள் இடம்பெற்றுள்ளனா்.
முன்னதாக, லண்டனின் ‘சென்ட்ரல் பேங்கிங்’ செய்தி இணையதளம் சாா்பில் இந்த ஆண்டுக்கான சிறந்த மத்திய வங்கி ஆளுநா் என்ற விருதை கடந்த ஜூன் மாதம் சக்திகாந்த தாஸ் பெற்றாா் என்பது குறிப்பிடத்தக்ககது.
இந்நிலையில், உலக அளவில் சிறந்த மத்திய வங்கித் தலைவர்களின் ‘ஏ பிளஸ்’ என்ற முதன்மையான பிரிவில் சக்திகாந்த தாஸ் இடம்பெற்றுள்ளதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Leave your comments here...