உலகின் மிக நீளமான அடல் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

Scroll Down To Discover

இமாச்சலப்பிரதேசம்: உலகின் மிக நீளமான அடல் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

இமாசலபிரதேச மாநிலம் மணாலியில் இருந்து லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்கு செல்லும் சாலை, பனிக்காலத்தில் கடுமையான பனிச்சரிவால் மூடப்பட்டு விடும். இதனால், லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்கு, ஆண்டுக்கு 6 மாதங்கள் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்படும்.


இதை கருத்தில்கொண்டு, மணாலி-லஹால் ஸ்பிடி பள்ளத்தாக்கை இணைக்க ரோதங் என்ற இடத்தில் சுரங்கப்பாதை கட்ட கடந்த 2000-ம் ஆண்டு ஜூன் 3-ந்தேதி, அப்போதைய வாஜ்பாய் அரசு முடிவு செய்தது.

அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் பயணம் செல்லும் வகையில், இந்த சுரங்கம் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கசாலையின் நீளம் 9.02 கி.மீ.,.கடல் மட்டத்தில் இருந்து, 10 ஆயிரம் அடி உயரத்தில் இந்த நெடுஞ்சாலைசுரங்கம் அமைந்துள்ளது.உலகிலேயே, நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள மிகவும் நீளமான சுரங்கமாக இது விளங்குகிறது. மொத்தம், 30 அடி அகலத்துடன், 17 அடி உயரத்துடன், இரண்டு வழிப் பாதையாக அமைக்கப்பட்டுள்ளது.


இந்த சுரங்கத்தால், மணாலி மற்றும் லே இடையேயான பயண துாரம், 46 கி.மீ., குறைகிறது. பயண நேரமும், ஐந்து மணி நேரம் குறையும். அவசர காலத்தில், எல்லைக்கு நம் ராணுவம் செல்வதற்கும் இந்த சுரங்கம் மிகுந்த உதவியாக இருக்கும்.

இத்தகைய சிறப்புகள் கொண்ட அடல் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி, நேரில் சென்று இன்று திறந்துவைத்தார். விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.