உத்தரபிரதேச மடாதிபதி மஹந்த் நரேந்திர கிரி மரணம் : சிபிஐ விசாரணைக்கு உத்தரபிரதேச அரசு பரிந்துரை

Scroll Down To Discover

உத்தரபிரதேச மாநிலம், அலகாபாத்தில் பாகம்பரி என்ற மடம் உள்ளது. இதன் மடாதி பதியான மஹந்த் நரேந்திர கிரி, சாதுக்களின் மிகப்பெரிய அமைப்பான அகில பாரதிய அகாடா பரிஷத் தலைவராக இருந்து வந்தார்.

இந்நிலையில், அவர் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இரு தினங்களுக்கு முன் இறந்து கிடந்தார். அவர் சடலத்தை மீட்ட போலீசார், அங்கிருந்த தற்கொலை கடிதத்தை கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில் ‘என் தற்கொலைக்கு சீடர்கள் ஆனந்த் கிரி, அத்யா பிரசாத் திவாரி, சந்தீப் திவாரி ஆகியோர்தான் காரணம். எனது போட்டோவை, ஒரு பெண்ணுடன் இருப்பது போல மார்பிங் செய்து அதை சமூக வலைதளத்தில் வைரலாக்க, ஆனந்த் கிரி திட்டமிட்டிருப் பதாக எனக்கு தகவல் வந்தது. நான் மரியாதையுடன் வாழ்ந்தவன். அவப்பெயருடன் வாழ விரும்பாததால் கடந்த 13-ஆம் தேதியில் இருந்தே தற்கொலை செய்ய முயற்சித்தேன். தைரியம் வரவில்லை’ என நரேந்திர கிரி கூறி உள்ளார்.

உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மடத்திற்கு மறைந்த மடாதிபதிக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த விஷயத்தில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப் படும்” என்றும், அவர் உறுதி அளித்தார். இந்த வழக்கு தொடர்பாக 18 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை உத்திரப் பிரதேச போலீசார் நியமித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அடுத்தடுத்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து ஆனந்த் கிரி உட்பட 3 சீடர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக 18 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை போலீசார் அமைத்துள்ளனர். இந்நிலையில் இந்த மரணம் குறித்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பரிந்துரைத்துள்ளார்.