உத்தரகண்ட் முதலமைச்சர் திரத் சிங் ராவத் நள்ளிரவில் திடீர் ராஜினாமா..?

Scroll Down To Discover

உத்தரகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத், பதவியேற்ற நான்கு மாதங்களேயான நிலையில் பதவியை ராஜினாமா செய்தார். உத்தரகண்டில் முதல்வர் தீரத் சிங் ராவத் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. 2017ல் உத்தரகண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது.

இதில் பாஜக வெற்றி பெற்று, முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் பதவியேற்றார். உட்கட்சி பூசலால், கடந்த மார்ச்சில் தன் பதவியை ராஜினாமா செய்தார். லோக்சபா எம்.பி.,யான தீரத் சிங் ராவத், முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

சட்டசபையில் எம்.எல்.ஏ.,வாக இல்லாத தீரத் சிங் ராவத், செப்டம்பருக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வாக வேண்டும். கொரோனா பரவல் காரணமாக இடைத்தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் தற்போது தயாராக இல்லை. எனவே, தீரத் சிங் ராவத் செப்டம்பருக்குள் எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்படுவதில் சிக்கல் உள்ளது.உத்தரகண்ட் மாநில பாஜக விலும் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அடுத்தாண்டு, உத்தரகண்டில் சட்டசபை தேர்தலும் நடக்கவுள்ளது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக டில்லியில் முகாமிட்டிருந்த ராவத், பாஜக தலைவர்களை சந்தித்து பேசி வந்தார். இதன் தொடர்ச்சியாக, உத்தரகண்ட் கவர்னர் பேபி ராணி மவுரியாவை சந்திக்க அனுமதி கேட்டுஇருந்தார்.

இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிடம், தன் ராஜினாமா கடிதத்தை நேற்று இரவு சமர்ப்பித்தார். இதையடுத்து, புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான பாஜக – எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், உத்தரகண்டில் இன்று நடக்கிறது.